சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச்  சம்வங்களில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த 350 க்கும் அதிகமானவர்களில் சிறுவர்கள் 45 பேர் அடங்குவதாக ஐ.நா. சபை நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 27 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 மாதங்களேயான குழந்தையொன்றும் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் வௌிநாடுகளைச் சேர்ந்த 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 20க்கும் அதிகமான குழந்தைகள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதுடன் அவர்களில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள், குடும்பங்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மிகவும் மோசமான செயல் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரினதும் குடும்ப உறவுகளுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு

இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – ஜனாதிபதி