உலகம்

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.

அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த  நிலையிலேயே அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நர்சிங்டி சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ள நிலையிலேயே பிரதமர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வன்முறைகள் மூண்டதை தொடர்ந்து சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும்  உண்மையான  எண்ணிக்கையை மதிப்பிட முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளை தொடர்ந்து பங்களாதேஸ் தநைகரில் இணையசேவைகள் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்காவில் பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது வீதிகளில் பொலிஸார் இராணுவத்தினர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரகாலமாக காணப்படும் முழுமையான முடக்கல் நிலையை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் சகோதாரர்களின் இரத்தம் வீணாவதற்கு அனுமதிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர் டாக்கா பல்கலைகழக மாணவர்களிற்கு ஏனைய பல்கலைகழக மாணவர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

1971ம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறையை கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாணவர்கள் தரத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

1971 ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் உட்பட விசேட குழுவினருக்கு ஆயிரக்கணக்கான அரசவேலை வாய்ப்புகளை ஒதுக்கும் நடைமுறை பங்களாதேசில் காணப்படுகின்றது.

இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2018 இல் இந்தஒதுக்கீட்டு முறை இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு 30 வீத ஒதுக்கீட்டை மீள வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது .

இது புதிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை  ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

இந்த ஒதுக்கீட்டை நான்கு வாரங்களிற்கு ஒத்திவைப்பதாக கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களை கல்விநடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு முறையை நிறுத்தவேண்டும் என கோரி திங்கட்கிழமை முதல் பங்களாதேஷ் பல்கலைகழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முறை பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு ஆதரவு வழங்குபவர்களின் குடும்பங்களிற்கு சாதமாக காணப்படுவதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்தின் அறிவிப்பு

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பெப்ரவரி 28 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு