உள்நாடு

தேயிலை ஏற்றுமதிக்கு புதிய வழிமுறைகள்

(UTV | கொழும்பு) – பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்தல் பல்வேறு வழிமுறைகளின் மூலம் நடைபெற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்குகின்ற பெருந்தோட்டங்களை கண்காணித்து தேயிலை ஏற்றுமதி மற்றும் வருமானத்தை உயர்த்துவதற்கு நீண்ட, மத்திய மற்றும் குறுகிய கால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். கைத்தொழிலின் வீழ்ச்சிக்கு காரணமான விடயங்களை இனங்கண்டு உலக சந்தையில் இலங்கை தேயிலை (Ceylon Tea) க்கு காணப்பட்டு வந்த உயர் கேள்வியை மீண்டும் அடைந்துகொள்ளல் எமது இலக்காக இருக்க வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதானமான 20 தோட்ட நிறுவனங்களில் 10 செயலிழந்துள்ளன. சிறு தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யும்போது பெருந்தோட்ட நிறுவனங்களின் உற்பத்தியின் அளவு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளது. நட்டம் அடைவதற்கும் செயலிழப்பதற்குமான காரணங்களை குறுகிய காலத்தில் இனங்கண்டு நிரந்தர தீர்வுகளை தருமாறு ஜனாதிபதிஆலோசனை வழங்கியுள்ளார். நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் செயற்திட்டமாக சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கையளித்து செயற்படுத்துவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வீதிகள்இ வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வழங்கியிருக்கும் போது பெருந்தோட்ட நிறுவனங்கள் நட்டமடைவது தொடர்பாக ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். உயர் விளைச்சலுக்காக தேயிலைத் தோட்டங்களை மறுசீரமைத்து மீண்டும் பயிர்ச்செய்கையை முறைப்படுத்துவதன் அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தேயிலைச் செடிகளில் விளைச்சலை பெறும் வரை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சுயதொழில் அல்லது வேறு ஏதேனும் தொழில்களில் ஈடுபடுவதற்கு சலுகைகளை வழங்குவதன் அவசியம் பற்றியும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேயிலை பற்றிய புதிய ஆராய்ச்சிகளின் மூலம் பயனடையாமை கைத்தொழிலின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவமளித்து புதிய சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதன் அவசியம் பற்றியும் அவர்கள் சுட்டிக்காட்டினர். உலக சந்தையில் உயர் கேள்வியைக்கொண்ட Bio Tea கைத்தொழிலை விரிவுபடுத்தி இலாபம் ஈட்டுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு பிரிவுகளை பலப்படுத்துவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் நோய்த் தொற்றுக் காலத்தில், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருந்த காலத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் காரணமாக கிட்டதட்ட நான்கு இலட்சத்து இருபத்தோராயிரம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாதுகாக்கப்பட்டதாக கூறிய சிறு தேயிலை தோட்ட பிரதிநிதிகள் அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள், பெருந்தோட்ட பிரதிநிதிகள் மற்றும் தேயிலை பயிர்ச் செய்கையாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Related posts

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு [VIDEO]

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்

 சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை