அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அரசியல் சுனாமி – திலும் அமுனுகம

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி அரசியல் சுனாமி என்றே குறிப்பிட வேண்டும். அதிகளவான ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்தோம். இருப்பினும் ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக போகவில்லை என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதனை அரசியல் சுனாமி என்றே குறிப்பிட வேண்டும். புதிய மக்களாணையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார மீது அதீத நம்பிக்கை கொண்டு நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய சிறந்த முறையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷவின் தவறான அரசியல் தீர்மானங்களினால் தான் இந்தளவுக்கு பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு சேவையாற்றியவர்களை மக்கள் தெரிவு செய்வார்களாயின் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார். நடைமுறை விடயங்களை கருத்திற் கொண்டே நாட்டு மக்கள் அரசியல் தீர்மானம் எடுப்பார்கள்.

ஐந்திற்கும் அதிகமான ஆசனங்களை நேரடியாக எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்குகளுக்கமைய ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததன் பின்னர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு செல்வது முறையற்றது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்