சூடான செய்திகள் 1

தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுதல் இன்று(21)

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளை நியமிப்பதில் பெரும்பான்மை தொடர்பான முரண்பாடு ஏற்பட்டால், தெரிவுக்குழுவை நியமிப்பது பிரச்சினைக்குரியது என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கை தங்களுக்கே அவசியம் என ஐக்கிய தேசிய முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தெரிவித்து வருகின்றமையே இதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், வியாழக்கிழமை பௌர்ணமி தினம் என்பதனால், இன்றைய தினம் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுவது கட்டாயமானதாகும்.

இந்தநிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான இணக்கப்பாடு எட்டப்படவில்லையாயின், தெரிவுக்குழுவை நியமிக்க முடியாதுபோகும் என நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக சபாநாயகர் உட்பட 12 பேர் பெயரிடப்படவுள்ளனர்.

இந்தநிலையில், இன்றைய தினம் அனைத்துக் கட்சிகளும் தெரிவுக்குழுவிற்கான உறுப்பினர்களை சபாநாயகருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதையடுத்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால், அந்தப் பெயர்கள் அறிவிக்கப்படும்.

இந்தத் தெரிவுக்குழுவின் ஊடாக ஏனைய அனைத்து தெரிவுக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நியமிக்கப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும், தெரிவுக்குழுவின் பெரும்பான்மை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க நேரிடும் என்றும் குறித்த நாடாளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் இன்றைய தினம் தெரிவுக்குழுவிற்கு பெயர்களைப் பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் விபரங்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெரிவுக்குழுவில் தமக்கே பெரும்பான்மை இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேவிபியின் உறுப்பினர்களின் விபரங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என அந்த கட்சி சார்பில் இதற்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்படும்

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!