சூடான செய்திகள் 1வணிகம்

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

(UTV|COLOMBO)-தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின் போது, சில முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கப்பெற்றதாக தாக அந்தச் சங்கத்தின் தலைவர் பி.டி.ஆர்.ராஜனும், செயலாளர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலியும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்புகொண்டு, தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய இரசாயனப்பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சிவப்பு பொசுபரஸ் ஆகியவற்றின் இறக்குமதியில், பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை நீக்கித்தருமாறு விடுத்த வேண்டுகோளை சாதகமாகப் பரிசீலிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டனர்.

“தீப்பெட்டி தயாரிப்பில், உற்பத்தியாளர்களான நாம் பல்வேறு முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றோம். இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளே இதற்கு பிரதான காரணமாகும். மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டெண்டர்களை (விலை மனு கோரல்) சமர்ப்பிக்கும் போது, அதற்கான சாம்பிள்களையும் (மாதிரி) வழங்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களைப் போலன்றி தற்போது சாம்பிள்களின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனை இறக்குமதி செய்வது கடினமாக உள்ளது. குறிப்பிட்ட இரசாயனப் பொருட்கள் எளிதில் தீப்பற்றும் திறன் கொண்டதால், விமானங்களில் கொண்டு வருவதற்கு குறைந்தளவு அனுமதியே கிடைக்கின்றது. பின்னர் சாம்பிள் இரசாயனப் பொருட்கள் பரிசீலனைக்காக ஐ.டி.டி பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கு பரிசோதனை நடவடிக்கைக்காக மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழிகின்றது. அதன் பின்னர், பரிசீலனை அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துக்காக இரண்டு வாரங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறைகள் முடிவடைந்து, மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய சுமார் ஒரு மாதகாலம் ஆகின்றது.

எமக்கு வேண்டிய மூலப்பொருட்கள் வந்து சேர்ந்த பின்னர், மீண்டும் அவை ஐ.டி.டி பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை எமக்குக் கிடைப்பதற்கு சுமார் மூன்று மாதகாலம் எடுக்கின்றது. இந்த கால நீடிப்பு எமது உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் பொருளாதாரத்தில் பெருமளவு பாதிப்பை சந்திக்க நேர்ந்துள்ளது” என்றும் சங்கத்தின் பிரமுகர்கள், அமைச்சரிடம் தமது கவலையை வெளியிட்டனர்.

தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபடும் சுமார் 11 உற்பத்தியாளர்கள் பங்கேற்ற இந்த சந்திப்பின் போது, தமது தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 8000 தொழிலாளர்களுக்கு உரிய வேதனங்கள் மற்றும் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்க முடியாது தாங்கள் திண்டாடுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இவைகளைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ரிஷாட், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு இவர்களின் நிலைமைகளை எடுத்துக்கூறியதுடன், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி இந்தத் தொழிலை மேற்கொள்ள, அனைத்துக் கெடுபிடிகளையும் நீக்க உதவுமாறும் வேண்டிக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கையை செவிமடுத்து, இதனை சாதகமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது