அரசியல்உள்நாடுவீடியோ

தினமும் நடக்கும் இந்த கொலைவெறி கலாசாரத்திற்கு முடிவே இல்லையா – சஜித் பிரேமதாச கேள்வி | வீடியோ

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் என்பன தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கருத்து.

2025 வரவு செலவு திட்டத்தின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (15) பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பிரதான விடயங்களில் கருத்துரைத்தார்.

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்.

பொது மக்களின் பாதுகாப்பு குறித்து நேற்றும் பேசினேன். அக்மீமன பூஸ்ஸ, தல்தென, மீகஹகிவுல, அகுனுகொலபலஸ்ஸ, வெலிவேரிய துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், மூதூரில் படுகொலை, மீண்டும் அம்பலாங்கொடையில் கொலை, கொழும்பு கிராண்ட்பாஸில் இரு கொலைகள் என பல சம்பங்கள் நடந்துள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கும் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பங்கர கொலைக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு கொலையை ஏற்பாடு செய்த பெண்ணையும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமும் நடக்கும் இந்த கொலைவெறி கலாசாரத்திற்கு முடிவே இல்லையா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், நாட்டு மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தெளிவான தீர்வை வழங்கி அதனை நாட்டுக்கு முன்வைக்குமாறு தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை வைத்துக் கொண்டும், அதன் வழியில் சென்றும் எம்மால் 2028 இல் கடனை அடைக்க முடியாது.

சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அரசாங்கம் தயாராகி வருகிறது. 2028 இல் எம்மால் கடனை அடைக்க முடியுமா என்பதை இது தீர்மானிக்கும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், புதிய கடன் ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்குச் செல்வதாகவும், புதிய IMF திட்டத்திற்குச் செல்வதாகவும் கூறியது. கடந்த அரசாங்கம் செய்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு நாட்டுக்கு பல பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தின் கொள்கையிலேயே செயற்படுகின்றது. எமது நாடு நிலையான கடன் சுழற்சியில் இல்லை. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவை பொய்யான புள்ளிவிபரங்களை முன்வைத்து அரசியல் இலாபங்களை பெற முயற்சிக்கும் விடயங்கள் அல்ல. எனவே கடந்த அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட தற்போது காணப்படும் இந்த IMF உடன்படிக்கையை இரத்து செய்யுமாறும், மக்களை ஏமாற்றி முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தை மாற்றியமைத்து, புதிய இணக்கப்பாட்டை எட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

2028 ஆம் ஆண்டு வரை இதற்காக காத்திருக்க வேண்டாம். 1975 இல் இருந்து 75 IMF உடன்படிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் போது, ​​இந்த இணக்கப்பாடுகளில் 41% இணக்கப்பாடுகள் முதல் தடவையிலயே வெற்றியடைந்துள்ளன. 59% இணக்கப்பாடுகள் தோல்வியடைந்துள்ளன.

எமது நாடு இந்த வெற்றி கண்ட 41% இணக்கப்பாடுகள் நிலையை எட்ட வேண்டும் என வாழ்த்துவதாகவும், இவ்வாறே தொடர்ந்தால் 2028 இல் எமது நாடு பெரும் சிக்கலுக்குள்ளாகும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளையும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாடாக நாம் வெளிவள சூழல் (External Environment) தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை. சேவைகள் மற்றும் பொருட்களின் இலவச பரிமாற்றக் கொள்கை உலக வர்த்தக ஒழுங்கில் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன.

உலகில் தற்போது வர்த்தகத்தின் அடிப்படையில் வரிப் போர் நடந்து வருகிறது. இந்த வரிப் போரில் நமது நாடு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளன.

நமது நாட்டின் ஏற்றுமதி சில நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்து வருகின்றன.

இந்த ஏற்றுமதி பரப்பை விரிவாக்க முடியாமல் போயுள்ளன. எனவே ஏற்றுமதி பரப்பை ஜரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா என விரிவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவுடனான நமது நாட்டின் உறவை வலுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில், நமது நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தபோது, ​​மூன்று பேரிடர்களின் போதும், ​​நம் நாடு இந்தியாவிடம் இருந்தே அதிக உதவிகளையும் நிதி வசதிகளையும் பெற்றன.

6 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கின. நமது நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தைக்கு அணுப்புவதை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவைப் போலவே சீனாவுடனும் தொடர்புகளைப் பேண வேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இந்நாடுகளில் சந்தைகளை அணுகுவது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

2028 இல் இலக்குகளை அடைய அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

பிராந்திய மட்டத்தில், இந்திய தொழில் பேட்டைகள், ஜப்பானிய தொழில் பேட்டைகள் போன்ற வளங்களையும் முதலீட்டாளர்களையும் பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு தொழில் பேட்டைகளை இலக்காக் கொண்ட திட்டத்திற்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

பிரியமாலியுடன் பணியாற்றிய 3 பிரபல நடிகைகள் CID இற்கு