அரசியல்உள்நாடு

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் நாட்டில் இயங்கும் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது.

முதுகெலும்பை நிமிர்த்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிக் கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான இயன்ற அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் யோசனை முன்வைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் எப்போதுமே மேடைப் பேசுக்களுக்கும், மேடைக் கதைகளாலும் ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களுக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் காணப்படும் இடைவெளியை இப்போதாவது நாட்டு மக்கள் நன்றாக புரிந்து புத்திசாலித்தனமாக தமது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும். தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக சமூகமே பாதுகாப்பற்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனுராதபுர நகரில் இன்று (28) காலை அடமஸ்தானத்தை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் குற்றங்களைத் தடுக்க எதிர்க்கட்சியின் ஆதரவை அரசாங்கம் கேட்பதற்கு முன்னமே நாம் எமது ஆதரவை தெரிவித்து விட்டோம்.

இந்த அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தொலைநோக்குப் பார்வையும் நோக்கும் இல்லை. மேடைகளில் கனவு உலகங்களை உருவாக்குவதும், நாட்டை ஆள்வது என்பதும் இரு வேறு விடயங்களாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களே எமக்கு முக்கியம்!

எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்நேரத்தில் உள்ள ஒரே சவால் மக்களை நன்றாக வாழ வைப்பதாகும்.

மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பேச்சாலும் செயலாலும் மக்களின் துன்பத்தைப் போக்க எம்மாலான சகல வழிகளிலும் முயற்சிப்போம். நடவடிக்கை எடுப்போம். செயல்படுவோம்.

அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல வேண்டும். அரசாங்கமானது இதனையே ஆற்ற வேண்டும். இதற்கு பாரிய மூலோபாயத் திட்டமொன்று தேவை. அவ்வாறான திட்டம் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளன.

தற்போது பிரதேச செயலாளர்கள், கல்வித்துறைகளில் கடமையாற்றும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆளுந்தரப்பினரின் நண்பர்களை அப்பதவிகளில் நியமித்து, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெருமளவிலான அரச ஊழியர்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கமானது, அரச ஊழியர்களை அவமரியாதை செய்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறே போனால் 2028 இல் கடனை செலுத்த முடியாது.

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% நமது நாட்டின் முதன்மைச் செலவினமாக மாற்றப்பட்டுள்ளது. முதன்மை இருப்பு 2.3 ஆக பேணிச் செல்ல வேண்டும்.

என்றாலும், இந்த வரம்பு காரணமாக, நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வளங்கள் இழக்கப்படுகின்றது. இதனால், 2028 கடனை அடைப்பது கனவாகவே காணப்படுகின்றது. நாடு இவ்வாறே சென்றால், 2028 இல் எம்மால் கடனை அடைக்க முடியாது.

இது தொடர்பான எச்சரிக்கைகள் கூட பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது கடன் மறுசீரமைக்கு செல்ல வேண்டி நேரிடும் போல் தெரிகிறது. இந்த விடயங்களை மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய சங்கத் தலைவர்கள் அமைச்சர்களான பிறகு அரிசி ஆலை முதலாளிகளின் அடிமைகளாக மாறியுள்ளனர்.

இந்நாட்டு மக்கள் குரல்கள் பாராளுமன்றத்தில் சரியாக ஸ்தானப்படுத்தப்படுவதில்லை. 159 பாராளுமன்ற உறுப்பினர்களை நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். அன்று மேடைகளில் உரத்துப் பேசப்பட்ட விவசாயத் துறைக்கு பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்த விடயங்களை அதிகாரம் கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் பேசாது மௌனம் காத்து வருகின்றனர்.

விவசாயிகளின் உரப் பிரச்சினை, உத்தரவாத விலையின்மை, இழப்பீடு இன்மை போன்ற விடயங்களில் ஆளுந்தரப்பினர் மௌனம் காத்து வருகின்றனர். இது குறித்து அரசாங்கம் பொருட்படுத்தாது இருந்து வருகிறது.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது வயல்வெளிகளுக்கு இறங்கி, 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம், இதனை சட்டமாக்குவோம் என பேசியவர்கள் அமைச்சரானதும் மௌனம் காத்து வருகின்றனர். சபையில் வாய் திறக்கிறார்கள் இல்லை.

விவசாய சங்கத் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு அரிசி ஆலை முதலாளிகளின் பணயக்கைதிகளாக மாறியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!