சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்

(UTV|COLOMBO) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

1989 ஆம் ஆண்டில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய மங்கள சமரவீர, அன்று முதல் இன்று வரை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், நாட்டிற்கும் மாத்தறை நகர மக்களினதும் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவையாற்றி வருகின்றார்.

“கனவுக்காக கேமாவின் பையன்” எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , தமக்கு வழங்கப்படும் அனைத்து பொறுப்புக்களையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் அமைச்சர் மங்கள சமரவீர, ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் ஒரு அரசியல்வாதியாவார் எனத் தெரிவித்தார்.

அவரது 30 வருட கால அரசியல் வாழ்க்கைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி , எதிர்கால செயற்பாடுகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.

நிகழ்வின் பிரதம உரையை ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஆற்றினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related posts

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

கடும் காற்றுடன் மழை

புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் விளக்கமறியலில்