அரசியல்உள்நாடு

சேவலின் வழியில் யானை – வெற்றி நிச்சயம் என்கிறார் ஜீவன் தொண்டமான்

நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை சேவலின் வழியில் யானை பயணிப்பதால் வெற்றி நிச்சயம் என முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

அனைத்து மலையக தலைமைகளும் இம்முறை ஒற்றுமையாக இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அழைத்தேன். அதேபோல கடந்த ஐந்து வருடங்களாக மலையகத்தில் அனைத்து கட்சி தலைமைகளும் ஒற்றுமையாக செயற்படுவதற்கு அழைப்பு விடுத்த போதிலும் அது நடக்கவில்லை.

ஆகையால் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அவரவர் தமக்கான கட்சிகளை தெரிவு செய்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூவர் இம்மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எம்முடன் ஐ.தே.கவை சேர்ந்த மேலும் பலர் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டாவிட்டால் நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார சிக்கல் ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் உலக நாடுகளுக்கு நிதியுதவி தொடர்பாக முன்மொழியப்பட்டிருந்தமையினால் தற்போது புதிய அரசாங்கத்திற்கு உலக நாடுகள் நிதிகளை வழங்க முன்வந்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி ஆதரவை காட்டிவரும் ஜனாதிபதி மலையக பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு என்ன செய்துள்ளார் என கேள்வியையும் எழுப்பினார்.

அதேநேரத்தில் நாம் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினோம். அதேபோல இம்முறை 1350 ரூபாய் சம்பள உயர்வு தொழிலாளர்கள் கரம் கிடைத்தது .ஆகையால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்காக நிதிகளை அமைச்சு ஒதுக்கியிருந்தது. அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு தற்போது என்ன நடந்துள்ளது என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரசு எமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Related posts

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நிலவும் கடுமையான வெப்பத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!