அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது – ஜனாதிபதி அநுர

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக சிறப்புக்குரிய பணியை ஆற்றியிருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாக கையளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்குள் காணப்படும் முக்கிய நிகழ்வான உபசம்பதா நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, உபசம்பதா முறை தடைப்படுவது முழு பௌத்த அமைப்பினதும் சிதைவாக அமையும் என்றும், இந்த வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாத்து கௌரவத்துடன் முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இலங்கை ராமண்ய பீடத்தினால் நடத்தப்படும் உபசம்பதா தேசிய நிகழ்வு 2025 ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 05 வரையில் விஜிதபுர, பழுகஸ்வெவ, புண்யவர்தனாராம விகாரையை மையப்படுத்தி உதகுக்கேப சீமாமாலக்கயவில் நடத்தப்படவுள்ளது.

250கும் அதிகமான இளம் பிக்குகளுக்கான உபசம்பதா நிகழ்வு அரசாங்க அனுசரணையுடன் நடைபெற வுள்ளது.

இலங்கை ராமண்ய மகா பீடத்தில் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உப சம்பதா நிகழ்வு ஒரு கௌரவ நிகழ்வாக அரசாங்கத்தினால் கருதப்படும் நிலையில் அதற்கு அவசியமான வசதிகளை தயக்கமின்றி செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

பௌத்த மத பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஊடாக சமூக மலர்ச்சியை ஏற்படுத்தலாம் என்றும், இவ்வாறான மத நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகத்தின் மலர்ச்சியை மேலும் வலுப்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ராமண்ய பீடத்தின் மகாநாயக்கர் அதி வண. மகுலேவெ விமல தேரர், ராமண்ய பீடத்தின் நீதித் தலைவர் அதி வண. அத்தங்கனே ரதனபால தேரர், ராமண்ய பீடத்தின் அனுநாயக்கர் அதி வண. வலேபொட குணசிறி தேரர்,ராமண்ய பீடத்தின் அனுநாயக்கர் அதி வண. அங்கும்புரே பிரேமவன்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த குமார விமலசிறி, ராமண்ய பீட பாதுகாப்புக் சபையின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ரமண்ய பீட பாதுகாப்பு சபையின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்