உலகம்

காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்திய இஸ்ரேல் – மிக கேவலமான, ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் – ஹமாஸ்

இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து வரும் உதவி பற்றாக்குறைக்கு மத்தியில், உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாரின், டோஹாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதி பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ள நிலையில், மின்சாரம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹமாஸ் அமைப்பு இது “கேவலமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்” என குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, காசா நகரின் ஷுஜாயே பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலியர்களை விடுவிப்பது குறித்து ஹமாஸுடனான அமெரிக்காவின் நேரடி சந்திப்புகள் “மிகவும் உதவியாக” இருந்ததாக, சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் தொடர்பான, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரதிநிதி அடம் பொஹ்லர் தெரிவித்துள்ளார் .

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளவும், ஆயுதங்களை கைவிட்டு, அரசியலில் ஈடுபடாதிருக்க ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவும் ஹமாஸ் அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேலின் சேனல் 11 இற்கு அளித்த பேட்டியில் பொஹ்லர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களை காசாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவது தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் பரவலாக கண்டிக்கப்பட்ட திட்டமானது படிப்படியாக வடிவம் பெற்று வருவதாக, இஸ்ரேலிய தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரேசில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு