அரசியல்உள்நாடு

களுத்துறையில் விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரி ராஜித சேனாரத்ன மனு தாக்கல்

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டெம்பர் 30ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு இன்று (06) நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், களுத்துறை தெரிவத்தாட்சி அதிகாரி, களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போனதாக மனுதாரர் தெரிவித்தார்.

தனக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான விருப்பு வாக்குகளில் உள்ள வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே என்றும், வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியில் களுத்துறை மாவட்டத்திற்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் கணக்கிட்டு புதிய முடிவுகளை வெளியிடுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ​பைஸ் முஸ்தபா ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு!

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு