அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட முடியும் – தலதா அத்துகோரள

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பான விவாதங்கள் வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாகவும், தலைமை மற்றும் சின்னம் குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று (30) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்த தலதா அத்துகோரள மேலும் கூறியதாவது:

தலைமை மற்றும் சின்னம் தொடர்பான சிக்கல்கள் பின்னர் சரிபார்த்துக்கொள்ள முடியும். ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு பிரிவினருடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற இரு உறுப்பினர்களே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இந்த இரண்டு குழுக்களுக்கும் இப்போது இரண்டு தலைவர்களாக உள்ளனர்.

இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சியினர் உள்ளனர். அதற்காக ஆரம்பித்துள்ளோம்.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் எவ்வாறு எழுகின்றன என்பதைப் பொறுத்து அதைப் பற்றி பேசுவோம்.

தலைமைத்துவம் பற்றி பேசுமளவுக்கு நாங்கள் வரவில்லை. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைக்கு இரு கட்சிகளின் தலைவர்களின் முழு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.

முதலில் ஒரு உடன்படிக்கைக்கு வருவதே எங்கள் நோக்கம். அதன் பிறகு மற்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

உதாரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கண்டி மாநகர சபைக்கான வேட்புமனுத் தயாரிப்பில் இரு குழுக்களின் வேட்பாளர்கள் முன்வைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டலாம்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதற்கு முன் ஒரு உடன்பாட்டை எட்டுவதுதான் எங்களின் இலக்கு.

இந்த ஒப்பந்தத்தில் மற்ற கட்சிகள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குழுவாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டதன் பின்னர் சின்னம் தொடர்பில் பேசலாம்.

முதலில் இதைப் பற்றி பேசினால், “யானை” வேண்டும் என்று ஐ.தே.க. கூறும். “தொலைபேசி” வேண்டும் என ச.ஜ.ப கேட்கும். பேச்சுவார்த்தையை நிறுத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சில சமயங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்துடன் போட்டியிடமுடியும் என்றார்.

இந்நிகழ்வில் கண்டி மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கேசர சேனாநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்

அரசியல் பழிவாங்கல் – இன்று முதல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம் 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் கரை ஒதுங்கிய படகு

editor