வகைப்படுத்தப்படாத

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திhபால சிரிசேன தெரிவித்தார்.

கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதுடன், 2017ஆம் ஆண்டினை வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி , அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு நிதித்துறையைச் சார்ந்த சகலரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் சூழல் பாதுகாப்பும் மிக முக்கியமாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , பேண்தகு அபிவிருத்தி கொள்கை முகாமைத்துவம் தொடர்பாக அனைத்து துறைகளையும் சார்ந்த புத்திஜீவிகளினதும், நிபுணர்களினதும் வழிகாட்டல் அவசியமாகுமென குறிப்பிட்டார்.

சூழல் பாதுகாப்புடன் கூடிய பௌதீக வளங்களின் அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட எதிர்கால அபிவிருத்திப் பணிகளில் நிதிக்கொள்கைகளும் முகாமைத்துவமும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி  மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், சுற்றாடல் அமைச்சு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஏனைய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தேசிய செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதன் தேவைப்பாடு குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பேண்தகு வங்கி வலையமைப்பு என்பவற்றுடன் இணைந்து இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு நிதித்துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

Police arrest suspect with locally made firearm

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்