உள்நாடு

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் இராஜதந்திர நெருக்கடி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கடுருகமுவ தெரிவித்தார்.

ஆனால் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டு விஜயத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வரும் 24ஆம் திகதி புதன்கிழமை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. குறித்த விஜயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் வினாவியபோது, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்துக்கான திகதி உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கடுருகமுவ வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களுக்கு மத்தியில், ஈரானின் இஸ்லாமியக் புரட்சிகர ஆயுதப்படைகள் இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தது. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான நடான்ஸ் உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் இஸ்பஹான் மாகாணத்தை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இரு தரப்பு நேரடி மோதல்கள் எப்போதும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்துக்கான திகதி உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

விஜயத்துக்கான திகதி இறுதிப்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் புலனாய்வு பிரிவு மற்றும் ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு பேரவையின் அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டு, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு சில நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளதாக கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் கூறுகையில்,

இலங்கையை பொறுத்தவரையில் அணிசேரா கொள்கையுடன் சிறந்த வெளிவிவகார கொள்கையில் செயல்படுகிறது. உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்கவே ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார். இஸ்ரேலுடன் எந்தளவு உறவுகளை கொண்டுள்ளோமோ, அதே அளவில் காசாவில் பாதிக்கப்பட்ட குழங்தைகளுக்கு நிதி உதவி அளித்து ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் சிறந்த வெளிவிவகார கொள்கையை இலங்கை பின்பற்றியது. இன்றும் அந்த கொள்கையில் மாற்றமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Kesari)

Related posts

இதுவரை 1633 பேர் கைது

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்