அரசியல்உள்நாடு

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி

‘‘இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் இலங்கை பல அனுகூலங்களைப் பெறமுடியும்’’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) புதன்கிழமை இடம் பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘‘இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். இலங்கை இந்தியா இடையே 18 கிலோமீற்றர்தான் இடைவெளி இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வந்துவிட முடியும். அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகம்பேர் இலங்கை வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பாலம் அமைத்தலானது அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்த அரசு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

அதேவேளை, கிளங்கன் வைத்தியசாலையை அரசு அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது.

எமது அரசினால் முடியாதுவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து தருவார்கள்.

ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.

அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீ லங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள், பஸ், முச்சக்கரவண்டி சாரதிகள், இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

Related posts

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது

உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணத்தடை

பிரதிப் பிரதமர் பதவி குறித்து அரசு கலந்துரையாடவில்லை