உள்நாடு

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளோ வாக்குமூலங்களோ இடம்பெறவில்லை

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் நேற்றைய தினம் ரிஷாத் பதியுதீனை பார்வையிட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது;

நானும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவர்களும் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இன்று சென்று தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களைச் சந்தித்தோம். கட்சி விடயங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்களை எம்முடன் பேசினார். அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள் முதற்கொண்டு பலரையும் நினைவு கூர்ந்தார். சகலருக்கும் தனது ஸலாத்தை எத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளும் நடை பெறவோ வாக்குமூலங்கள் பெறப்படவோ இல்லை என்றும் தன்மீது எந்தக் குற்றச் சாட்டுகளும் தெரிவிக்காத நிலையிலேயே தம்மை அவர்கள் தடுத்து வைத்துள்ளனர் என்பதையும் சொன்னார். தன் மீது குற்றம் சாட்டுவதற்கு தான் எந்தக் குற்றமும் இழைத்திருக்கவில்லை என்று தைரியத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஏனென்றால் கடந்த காலங்களில் அவர்கள் தம்மிடம் பலமுறை வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள், இனி என்னிடம் கேட்பதற்கு அவர்களுக்கு எதுவும் கிடையாது, என்னிடமிருந்து எவற்றையெல்லாம் அவர்கள் அறிய வேண்டுமோ அவை அனைத்தையும் அவர்கள் ஏற்கெனவே கேட்டு முடித்து விட்டார்கள் என்றார்.

அவருடைய அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அநேகமாக வரும் வாரம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படலாம் என்று நம்புகிறேன். இதன் விபரங்களை சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெளிவு படுத்தினார்.

கட்சி முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள் அனைவருக்கும் தைரியத்தை வழங்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். யாரும் எதற்கும் கலங்காமல் உறுதியுடன் இருக்கும் படி சொன்னார். தனக்காகப் பிரார்த்தித்தவர்கள், பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தனது நன்றியறிதலைத் தெரிவிக்குமாறும் பிரார்த்தனையில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதுடன் தனக்காகத் தொடர்ந்து பிரார்த்திக்குமாறும் வேண்டு கோள் விடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அவர் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய பிரார்த்தனையில் ஓர் இஸ்லாமிய சகோதரன் என்ற அடிப்படையில் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!