அரசியல்உள்நாடு

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக் கூற வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தீ வைத்ததை பற்றி பேசவில்லை.

இழப்பீட்டுத் தொகையை பட்டியலிடுவதை போன்று தீ வைத்தவர்களின் விபரத்தை அரசாங்கத்தால் பட்டியலிட முடியுமா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள ஒன்று குரங்குகள் மீது பழி போடுகிறது. அல்லது கடந்த கால அரசாங்கம் தொடர்பான அறிக்கை, பட்டியலை வெளியிடுகிறது. ஆனால் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் மே 09 கலவரத்தில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகையை சிரித்துக் கொண்டே பட்டியலிட்டார்.ஆனால் அவர் ஒருசில விடயங்களை மூடி மறைத்துள்ளார்.

போராட்டத்தின் போது எனது வீடு உட்பட 14 கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எனக்கு எவ்வாறான அடிப்படையில் அந்த தொகை கிடைக்கப் பெற்றது என்பதை அமைச்சரவை பேச்சாளர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை.

இவர்கள் தேர்தல் காலத்திலும் மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைத்தார்கள். ஆட்சிக்கு வந்த பின்னரும் வெறுப்பையே விதைக்கிறார்கள்.

2022 மே 09 கலவரத்தின் போது அரசியல்வாதிகளின் வீடு தீ வைக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த சம்பவத்துடனான வழக்கில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மே 09 சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். எமது அரசாங்கத்தில் நிச்சயம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பொறுப்புதாரிகள் பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட இழப்பீட்டுத் தொகை பற்றி சிரித்துக் கொண்டு பட்டியலிடுகிறார்.

ஆனால் பற்றவைத்த தீ பற்றி பேசவில்லை. வன்முறையை தூண்டி விட்டு பாரிய அழிவை ஏற்படுத்தியவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கத்தால் பட்டியலிட முடியுமா என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்

editor

பாராளுமன்ற கொத்தணி : அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை