அரசியல்உள்நாடு

அநுர – ரணில் இடையே வித்தியாசமில்லை – மக்கள் எமக்கு வாக்களிப்பதே பொருத்தமானது – நிமல் லான்சா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துச் செல்கின்றார். அவ்வாறெனில், பொதுத் தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களிப்பதே பொருத்தமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடளாவிய ரீதியில் சிலிண்டர் சின்னத்தில் பலமான ஒரு அணியை களமிறக்கியிருக்கின்றோம். ராஜபக்ஷர்கள் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அரசியலிலிருந்து விலகுவார்களா எனத் தெரியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ராஜபக்ஷர்களின் கட்சியாகும். அவ்வாறிருக்கையில் அந்த கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடாமல் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு வர முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாகும்.

எமக்கு அரசாங்க அதிகாரம் தேவையில்லை. அதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைக்காட்டிக்கு வழங்குங்கள்.

ஆனால், எமக்கு பலமான எதிர்க்கட்சியொன்றே தேவையாகும். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 38 எம்.பி.க்கள் எம்மில் இருக்கின்றனர். இம்முறை அதனை விட அதிக ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்று நம்புகின்றோம்.

இது ஜனாதிபதித் தேர்தல் அல்ல. பாராளுமன்றத் தேர்தலாகும். எனவே, மக்கள் தம்முடன் வாழும் தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கும் பொதுத் தேர்தல் முடிவுகளுக்கும் இடையில் மாற்றங்கள் காணப்படும் என்று நம்புகின்றோம்.

கடந்த காலங்களில் ஜே.வி.பி.யில் 39 எம்.பி.க்கள் காணப்பட்டனர். ஆனால், பின்னர் அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைவடைந்தது. முன்னர் இருந்த எவரும் இம்முறைத் தேர்தலில் களமிறங்கவில்லை. காரணம், மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரவின் வெற்றியை பயன்படுத்திக்கொண்டு பாராளுமன்றத்துக்கு வருவதே பெரும்பாலானோரின் நோக்கமாக உள்ளது.

மக்கள் எமது அரசாங்கத்தைப் புறக்கணித்தாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கிறது. ரணிலின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அநுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் மக்கள் இம்முறை எமக்கே வாக்களிப்பது உசிதமானதாக இருக்கும். காரணம், அவர்களால் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை என்றால், நாம் ஆரம்பித்தவற்றை நாமே நிறைவு செய்வோமல்லவா? அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுக்குமளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்றில் இரண்டை வழங்கியதால் நாடு எவ்வாறான அழிவுகளை சந்தித்தது என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் – ராஜித்த சேனாரத்ன

editor

கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் மஞ்சளுடன் ஐவர் கைது.